×

வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக தமிழகத்திற்கு கூடுதலாக 1350 நீதிபதிகள் நியமிக்க வேண்டும்

தென்காசி,ஜன.14: வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 1350 கூடுதல் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என ெதன்காசியில் நடந்த மாவட்ட நீதிமன்றங்கள் திறப்பு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா பேசினார். தென்காசியில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் மற்றும் மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் மன்றங்களின் திறப்பு விழா நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்காபூர் வாலா தலைமை வகித்து நீதிமன்றங்களை திறந்துவைத்தார். உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமார், இளங்கோவன், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி முன்னிலை வகித்தனர். இதைத் தொடர்ந்து குற்றாலம் காசிமேஜர்புரம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த திறப்பு விழாவில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் விஜய் குமார் கங்காபூர் வாலா, உயர் நீதிமன்ற நீதிபதிகள் இளங்கோவன், சுரேஷ்குமார், கலெக்டர் துரை. ரவிச்சந்திரன், எஸ்பி சுரேஷ்குமார், வக்கீல் கனகசபாபதி ஆகியோர் பேசினர்.

நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா பேசுகையில் ‘‘தென்காசியில் புதிதாக துவங்கப்பட்டுள்ள இரு நீதிமன்றங்களும், வாதிகளுக்கும், வக்கீல்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு ஏதுவாக இருக்கும். இதேபோல் வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 1350 நீதிபதிகளை நியமிக்க வேண்டும். சட்ட அமைச்சர் முன்பாக இக்கோரிக்கையை வெளிப்படுத்துகிறோம். அதிக அளவிலான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் நீதிபதிகள் கவலையுடன் இதைத் தெரிவிக்கின்றனர். நிலுவையில் உள்ள வழக்குகளால் அல்லது தாமதங்களால் வாதிகள், பாதிக்கப்படுகின்றவர்கள் நீதிமன்றத்திற்கு வராமல் கூட போகலாம். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களுக்கு நீதி எவ்வாறு கிடைக்கும். நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் வழக்குகளை விரைந்து தீர்க்க முடியும். கடந்த 2023ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு லட்சத்து 11 ஆயிரம் வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளது. மதுரை அமர்வில் 65 ஆயிரம் வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளது.

இவ்வளவு அதிகமான வழக்குகளை தீர்த்து வைத்தது நமது மாநிலம் மட்டுமே என்பதை பெருமையாக தெரிவித்துக் கொள்கிறேன். வழக்குகளை தீர்க்க வாதிடுவது மட்டுமே தீர்வாகாது. மாற்று வழிகளை நாம் கண்டறிய வேண்டும். சமரச தீர்வு உள்ளிட்டவற்றை நாட வேண்டும். நீதிமன்றங்கள் வெறும் செங்கல்களால் ஆனது அல்ல. பாதிக்கப்பட்டவர்களின் கடைசி நம்பிக்கையும், நீதியின் அடையாளமுமாக உள்ளது. வக்கீல்களும், நீதிபதிகளும் அந்த நம்பிக்கையின் நீட்சியாக உள்ளனர். நீதிமன்றங்களுக்கு அடிப்படை கட்டமைப்புகள் மிகவும் அத்தியாவசியமானது’’ என்றார்.

விழாவில் தனுஷ்
குமார் எம்பி, தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், அரசு வக்கீல்கள் சுப்பிரமணியன், வேல்சாமி, இருதயராஜ், முருகன், முத்துக்குமாரசாமி, மாரிக்குட்டி, திருமலைக்குமார், ஜேக்கப், முன்னாள் அரசு வக்கீல்கள் கார்த்திக் குமார், ராமச்சந்திரன், சின்னத்துரைபாண்டியன், சுப்பையா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நீதித்துறை நடுவர் மனோஜ்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி சந்திரா, தென்காசி மாவட்ட முதன்மை நீதிபதி கருணாநிதி, தென்காசி பார் அசோசியேசன் தலைவர் செல்லத்துரை, செயலாளர் மாரியப்பன், அட்வகேட் அசோசியேசன் தலைவர் பாண்டியராஜன், செயலாளர் புகழேந்தி செய்திருந்தனர்.

சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை
விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில் ‘‘சமூக நீதி மாநில சுயாட்சி, சுயமரியாதை பொருளாதார சமநிலை, வேளாண் வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, சமூக மற்றும் மத நல்லிணக்கம் சமூக, அரசியல், பொருளாதார நீதி ஆகியவற்றை தமிழ்நாட்டு மக்களுக்கு சிறப்பாக கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் குறிக்கோள் ஆகும். பேப்பர் இல்லாத நிர்வாகம், திறமையான விரைவான நீதி வழங்குதல், மின்னணு அலுவலகம், மின்னணு நிர்வாகம் போன்ற தலைமை நீதிபதியின் எண்ணங்களுக்கு அரசு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. நிலம், கட்டிடம் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுப்பதற்கு அரசு முன்னுரிமை வழங்குகிறது. முதல்வர் நீதித்துறைக்கும், நீதிபதிகளுக்கும் உரிய மரியாதையை எப்போதும் தந்து வருகிறார். நீதிமன்ற நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்கும்போது எல்லாம் இரு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்.

ஒன்று உச்ச நீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்க வேண்டும். மற்றொன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்பது ஆகும். வழக்கு மொழியாக கொண்டு வருவதற்கு முன்னால் அனைத்து சட்ட சொற்களையும் தமிழ் மொழியில் மொழிபெயர்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சட்ட மொழி ஆணையம் பல்வேறு சட்டச் சொற்களை மொழி பெயர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 சட்டப் புத்தகங்கள் தமிழில் வெளியிடப்பட உள்ளது. தென்காசியில் துவங்கப்பட்டுள்ள புதிய நீதிமன்றங்கள் வாதிகளுக்கும் வக்கீல்களுக்கும் மிகவும் உதவிகரமாக இருக்கும்’’ என்றார்.

The post வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக தமிழகத்திற்கு கூடுதலாக 1350 நீதிபதிகள் நியமிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Tenkasi ,Madras High Court ,Chief Justice ,Sanjay Vijayakumar Gangapoorwala ,Dinakaran ,
× RELATED தமிழகம் முழுவதும் கல்வி...